- சரோஜ் பதிரண
சில மாதங்களுக்கு முன்பு இலங்கையின் உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கொன்றில் இளம் வழக்கறிஞர் ஒருவர் வாதாடிய விதம் அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டது. முழு நாட்டினதும் கவனத்தை ஈர்த்த இந்த வாதம், அவரது தரப்பினரால் மட்டுமன்றி எதிர்த்தரப்பினராலும் பாராட்டப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன சட்டவிரோதமாக பிரதமரை பதவியில் இருந்து இறக்கி, பாராளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் வழக்கே அது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் தாக்கல் செய்த மனு சார்பிலேயே இந்த இளம் வழக்கறிஞர் ஆஜராகியிருந்தார். இவரது வாதம் குறித்து த இந்து பத்திரிகையின் ஊடகவியலாளர் மீரா சிறீநிவாசன் குறிப்பிடும் போது, அத்தியாயம் 33(2)(இ) இல் குறித்துரைக்கப்பட்டுள்ள ஒரு நபரின் (ஜனாதிபதியின்) பார்வை, மக்களினதும் அவர்களது உரிமைபெற்றவர்களினதும் பார்வையை விட சக்தி வாய்ந்தது என்ற வாதம் முன்வைக்கப்பட்ட போது, அதற்கு ஒரே ஒரு வார்த்தை மட்டுமே உள்ளது, அது தான் சர்வாதிகாரம் என ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் அதனை எதிர்த்து வாதாடினார் எனக் குறிப்பிடுகின்றார். இவரது வாதம் எவ்வளவு பலமானது என்றால், விசாரணையின் முடிவில் மனுதாரர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் உட்பட அனைத்து மூத்த வழக்கறிஞர்களும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் ஏனையவர்கள் நின்றிருக்க இவர் மட்டுமே இருக்கையில் அமர்ந்திருந்தார். அவரது திறமையை மதிக்கும் வகையிலேயே அவரை இவ்வாறு செய்வதற்கு ஏனையவர்கள் வற்புறுத்தியிருந்தனர்.
போராளி
இப்படி தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகளில் ஆஜராகிய இவர் அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் அநீதி, அநியாயம் என அவர் காணும் எந்த விடயத்துக்காகவும் வீதியில் இறங்கிப் போராடுபவராக இருந்தார். சுழலும் நாற்காலியிலமர்ந்து போராட்டம் நடத்துபவராக அவர் இருக்கவில்லை. இப்படி நீதித்துறையிலும், ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் மதிக்கும் பலராலும் மதிக்கப்படும் இந்த இளம் வழக்கறிஞர் ஏப்ரல் 14 முதல் பொலிஸாரினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் தான் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்.
அவருக்கு நீதி தேடி ஆரம்பிக்கப்பட்டுள்ள Justice for Hijaz என்ற டுவிட்டரில் அவரைப் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதும், விளிம்பு நிலையிலுள்ள குரலற்ற மக்களின் குரலாகச் செயற்படுவதும், நல்லிணக்கத்துக்காக உழைப்பதும், தீவிரவாதத்துக்கு எதிராக வாதிடுவதும் தேசப்பற்று என்றிருந்தால், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உண்மையான தேசப்பற்றாளர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவருக்கு ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதனால் தொடர்ந்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மூன்று மாத தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டு அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன பிபிசி சிங்கள சேவைக்குத் தெரிவித்துள்ளார். தமக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமது வழக்கறிஞர்களுடன் சுதந்திரமாகக் கலந்துரையாடுவதற்குக் கூட அவருக்கு அவகாசம் வழங்கப்படவில்லை. ஈஸ்டர் தாக்குதலுடன் அவரைத் தொடர்புபடுத்துவதை அவரது குடும்பத்தினர் கடுமையாக மறுக்கின்றனர். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்கறிஞர்களைச் சந்திப்பதற்குக் கூட வாய்ப்பு வழங்காமல் அவரை நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தாமல் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச அளவிலும் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளன.
சர்வதேசத்தின் எதிர்வினை
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்துக்கு தாம் கடிதம் அனுப்பியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் மே 26 இல் டுவிட்டர் செய்தி வெளியிட்டிருந்தது. உலகெங்கிலும் உள்ள நீதிபதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச சட்ட ஆலோசகர்கள் கவுன்ஸில் (ICJ) சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் போது, மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பிலான விசாரணைகளை நீதியாகவும் சரியான முறையிலும் நடத்துமாறு தாம் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பான வழக்கு விசாரணைகளில் சட்டத்தின் மூலவேர்களில் நின்று செயலாற்றுமாறு சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் பிரிவு நீதியமைச்சர் நிமல் சிரிபால டி சில்வாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
முஸ்லிம் சமூகம் மீதான வேறுபாடு
கொரோனா தொற்று பரவுகின்ற நிலையில், அரசியல் எதிரிகளால் முஸ்லிம்கள் மீது வேறுபாடு காட்டப்படுகின்ற சூழ்நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் பிரிவு சுட்டிக் காட்டியுள்ளது. சிங்களப் பெண்களை மலடாக்குவதற்கான அறுவைச் சிகிச்சை செய்ததாக போலியாகக் குற்றஞ்சாட்டப்பட்ட (இந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்கான சாட்சிகள் இல்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தது) டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன் சார்பில் ஆஜராகியவர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புக்கள், சட்டத்தரணிகள், சிவில் நிறுவனங்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் எனப் பல தரப்புக்களும் அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் தீவிரமாக கேள்வி எழுப்பியுள்ளன.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வைக் கைது செய்வதுடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து ஊடகவியலாளர் ஜயனி அபேசேகர வரைந்துள்ள நீண்ட கட்டுரையில் கொரோனா வைரஸ் காவல்துறையினருக்கோ அரசாங்கத்துக்கோ சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுவதற்கு வழங்கப்பட்ட லைசன்ஸ் அல்ல எனக் குறிப்பட்டுள்ளார். இதற்கிடையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கலாநிதிக் கற்கையில் ஈடுபட்டிருக்கும் சட்டத்தரணி கெஹான் குணதிலக, சந்தேக நபர்களைக் குற்றவாளியாக்க இலங்கை ஊடகங்கள் ஏன் இவ்வளவு ஆசைப்படுகின்றன என டெய்லி எப்டியின் கட்டுரையொன்றை மேற்கோள் காட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் குடும்பத்தினர் சுட்டிக் காட்டுவதன்படி, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து பாதுகாப்புத் துறையினர் நடந்து கொண்ட விதம் கடுமையான சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. குடும்ப உறுப்பினர்களால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மற்றும் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, பொலிஸ் மற்றும் பெரும்பாலான ஊடகங்கள் செயற்படும் விதம் தொடர்பில் பின்வரும் விடயங்களைக் குறித்துக் காட்ட முடியும்.
- அவரைக் கைது செய்வதற்கு பொலிசார் வருவதற்கு முன்னர் கிடைத்த தொலைபேசி அழைப்பில், தனிமைப்படுத்தலைக் கருத்திற் கொண்டு சுகாதார அதிகாரிகள் அவரது வீட்டுக்கு வருவதாகக் குறிப்பிடுகிறது
- அதிகாரிகள் வீட்டுக்கு வந்ததும் அவரைக் கைவிலங்கிட்டு வாக்கு மூலம் பெற்றனர்
- கைது செய்யப்பட்டதிலிருந்து இதுவரை அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவில்லை
- அவரது சட்டத்தரணியைச் சட்டத்தரணியைச் சந்தி்ப்பதற்கு இரண்டு தடவைகள் மட்டுமே அவர் அனுமதிக்கப்பட்டார். அதுவும் புலனாய்வுப் பிரிவு அதிகாரியின் முன்னால் வழங்கப்பட்ட 10 நிமிடங்கள் மாத்திரமே. அதிலும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்துப் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
- அவர் ஒரு மத்ரஸாவின் அதிபர் எனவும், ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி ஸஹ்ரான் ஹாஷிம் அங்கு வந்து விரிவுரை நிகழ்த்தியுள்ளதாகவும் திடீரென ஒரு குற்றச்சாட்டு இவர் மீது முன்வைக்கப்பட்டது. இந்த மத்ரஸாவின் மாணவர் ஒருவர் நீதிமன்றத்துக்கு முன்வைத்ததாகச் சொல்லப்படுகின்ற இரகசிய வாக்குமூலமொன்றும் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டது.
- இந்தக் குற்றச்சாட்டை அப்பட்டமான பொய்யென மறுத்த குடும்பத்தினர், இரகசிய அறிக்கையொன்று எப்படி ஊடகங்களுக்குக் கிடைத்திருக்கும் எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
- இதற்கிடையில் பொலிஸார் பலவந்தமாக வாக்குமூலம் பெற்றதாக மத்ரஸா மாணவர்கள் இரண்டு பேரின் பெற்றோர் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சிங்கள ஊடக அறிக்கைகளை பகுப்பாய்வு செய்யும் ethics eye அமைப்பும் இந்த அறிக்கைகளின் நெறிமுறைகளை கேள்விக்குட்படுத்தியுள்ளது.
பொலிஸாரின் எதிர்வினை
விசாரணைகள் இன்னும் முடிவடையாததாலேயே சடடத்தரணி ஹிஜாஸை இதுவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பிடிவிராந்து இல்லாமல் வீடுகளில் நுழைந்து எவரையும் கைது செய்வதற்கு பொலிசாருக்கு அதிகாரம் இருக்கிறது. எனவே அவர் இன்னும் சிஐடியின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன பிபிசிக்கு தெரிவித்திருந்தார். விசாரணை முடியும் வரை நாங்கள் அவரைத் தடுத்து வைக்க வேண்டி வரும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கைது செய்யப்படுவதற்கு முன்னர் சுகாதார அதிகாரிகளாகச் சொல்லப்பட்டவர்கள் எவரும் அவருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்ததாக தமக்கு எந்தவித தகவல்களும் அறிவிக்கப்படவில்லை எனக் கூறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெறுவதால் தம்மால் வெளிப்படுத்த முடியுமான தகவல்களை மாத்திரமே ஊடகங்களுக்கு வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.
பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவிப்பதன்படி, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் அரசியல் நோக்கம் கொண்டவையல்ல, எனவே அதற்கு அரசியல் அழுத்தங்கள் ஏதும் இல்லை. ஈஸ்டர் தாக்குதலில் சம்பந்தம் இருப்பதாகச் சந்தேகம் இருந்தால் ஹிஜாஸைக் கைது செய்வதற்கு ஏன் ஒருவருட காலம் எடுத்தது என பிபிசி சிங்கள சேவை கேட்டதற்கு, தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதால் மேலும் சந்தேக நபர்கள் தொடர்பிலும் முன்வரும் காலங்களிலும் தகவல்கள் வெளிவரக் கூடும் என அவர் தெரிவித்தார். – பிபிசி சந்தேசய
http://meelparvai.net/?p=25320&fbclid=IwAR3wJYc2_xEzlJH1h4Gsa0wOiSKS6L-_PuHzspXaRqUxIsppoWQ_IOzDpCE